துளி 44 – சிலப்பதிகாரம்

30 Mar 2022 3:35 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 44
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 30-03-2022

சிலப்பதிகாரம்

தமிழில் ஐம்பெருங்காப்பியங்கள் என்று அழைக்கப் படுகிற சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றில் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டு மட்டுமே தமிழ்க் காப்பியங்கள். மீதியுள்ள மூன்றும் வடமொழி தழுவியன வாகும். அதிலும் வளையாபதி, குண்டலகேசி என்ற நூல்கள் முழுமையாக நமக்கு கிடைக்காதவையாகும்.

இந்த ஐந்திலும் காலத்தாலும் கருத்தாலும் முதன்மை பெறுவது சிலப்பதிகாரம் என்ற காப்பியம் மட்டுமே. நமக்குக் கிடைத்திருக்கும் காப்பியங்களில் பழமையானதும் இதுவே. இது ஒரு கடைச் சங்க கால நூலாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பட்டுள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரபில் உதித்த கண்ணகி, கோவலன் என்பவர்களுடைய வரலாற்றைக் கூறுகிறது. இளமையிலேயே துறவு மேற்கொண்ட முத்தமிழ்ப் புலமையுடைய இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட இக்காப்பியம் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றும் பாராட்டப்படுகிறது.

காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும்.

தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது.
புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்னும் மூன்று காண்டங்களில் முப்பது காதைகளில் மொத்தம் 5001 (ஐயாயிரத்து ஒன்று ) அடிகள் கொண்டது.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் சோழன், பாண்டியன், சேரன் என்ற மூவேந்தர்களை இணைத்து மூவேந்தர் நாடுகளில் கதையை நடத்திச் செல்கிறார் இளங்கோவடிகள்.

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் விரவப் பெற்றிருப்பதால் இது முத்தமிழ்க் காப்பியம் என்றும் வழங்கப்படுகிறது. உலகத்தின் பிறமொழிக் காப்பியங்களைப் போல அல்லது வடமொழிக் காப்பியங்கள் போலவோ தெய்வங்களையோ மன்னர்களையோ காப்பியத்தலைவனாகக் கொள்ளாமல் மக்களையே கொண்டதால் இதைக் குடிமக்கள் காப்பியம் என்றும் சொல்வர். சிலப்பதிகாரத்திற்கு இணையான ஒரு நாடக நூல் வேறு எந்த மொழிகளிலும் இல்லை.

சிலப்பதிகாரத்தை சில நிமையங்களில் உரைப்பது என்பது மிகக் கடினம் எனினும் இந்த காப்பியத்தில் நாம் பெறும் சில முதன்மைக் கூறுகள்:-

  1. கடல் கோளால் அழிந்து போன குமரிக் கண்டத்தின் பஃறுளி ஆறு, குமரி மலை குறித்து,
    பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கடுங்கடல் கொள்ள ….. என்ற வரிகளின் மூலம் இலெமுரியாக் கண்டம் கடல் கோளால் மூழ்கியச் செய்தியை அறிகிறோம்.
  2. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்: ஊழ்வினை வந்து உறுத்தும் ; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவோர் – என்ற வரிகள் மூலம்
    அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்த பின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளுடன் நேர்மை, நீதி தவறாத ஆட்சி முறை தமிழர்களுடையது என்று பேசுகிறது சிலப்பதிகாரம்.
  3. தேரா மன்னா செப்புவது உடையேன்
    எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப..
    என்று வழக்குரை காதையில் வரும்
    இந்த வரிகள் தமிழர் ஆட்சி முறையில் குடிமக்கள் பெற்றிருந்த உரிமை குறித்து பேசுகிறது.

தமிழர் ஆட்சி, அரசியல், நேர்மை, உரிமை, ஒற்றுமை, இயல், இசை, நாடகம், அகம், புறம், அறம், பொருள், இன்பம் என அனைத்துக் கூறுகளின் கலவையாய் அமைந்த ஓர் அரிய இலக்கியம் சிலப்பதிகாரம். தமிழர்கள் மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் காப்பியங்களில் காட்டும் ஆர்வம் தவிர்த்து தமிழ் மொழி, தமிழர் வாழ்வியல், தமிழர் வரலாறு குறித்தும், நாடகக் கலை குறித்தப் பல்வேறு நுண்ணியச் செய்திகளையும் தரும் சிலப்பதிகாரம் போன்ற கலை வடிவங்களை காண்பதிலும் தமிழர் தம் பண்பாட்டு மரபுகளை உள்வாங்குவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அதுவே தமிழர்களுக்கு நலம் பயக்கும் வகை அமையும்.

தமிழ் நாட்டின் பழம் பெருமைக்கு இந்நூல் ஒரு நற்சான்றாக விளங்குகிறது.

எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல!

தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
30-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives