துளி – 43 முத்தொள்ளாயிரம்

24 Mar 2022 2:14 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 43
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 23-03-2022

முத்தொள்ளாயிரம்

பொதுவாகவே தமிழ் இலக்கியங்கள் அகம், புறம் என வாழ்வியல் கூறுகளைப் பிரித்து அதற்கொப்ப குமுகாய ஒழுக்க விதிகளை வகுத்து வாழ்ந்த பெருமை கொண்டதாகும். வீரம், காதல் என்ற இருவகை உணர்ச்சிகளில் இவை அடங்கியிருப்பதைக் காணமுடியும்.

முத்தொள்ளாயிரம் என்ற இந்த நூல் கால அளவையில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப் பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் வகைப் படுத்தியுள்ளனர். எனவே தான் இது செவ்வியல் இலக்கியங்கிளில் ஒன்றாக வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. அவரைப் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பும் எட்டவில்லை. எனினும் காணக் கிடைக்கும் பாடல்கள் மூலம் இவர் பாண்டிய நாட்டவராய் இருக்கக் கூடும் என்பது உரையாசிரியர்களின் மதிப்பீடு ஆகும்.
இந்நூல் முழுவதும் வெண்பா யாப்பில் அமைந்த ஒன்று.

தமிழில் முதல் சங்கம், இடைச் சங்கம் கால நூல்கள் பெரிதும் நமக்குக் கிடைக்கவில்லை. சங்க காலம், சங்க மருவிய காலங்களில் கூட பல நூல்கள் நமக்கு முழுமையாகக் கிட்டவில்லை. அப்படிப்பட்ட ஒரு நூல் தான் முத்தொள்ளாயிரம் என்ற இந்த இலக்கியம்.

சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களைப் பற்றிப் பாடப் பட்ட ஒன்று. அதாவது ஒவ்வொரு வேந்தனைப் பற்றியும் தொள்ளாயிரம் பாடல்கள் எனப் பாடி மொத்தம் (2700) இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் கொண்டமையால் இது “முத்தொள்ளாயிரம்” என்ற பெயரினைப் பெற்றது. எனினும் இந்த நூலில் நூற்றி எட்டு பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. இதை தொகை நூலாக “புறத்திரட்டு” என்பதில் வைத்துள்ளனர். இதில் சோழனைப் பற்றி 29 (இருபத்தொன்பது), பாண்டியன் பற்றி (56) ஐம்பத்தாறு, சேரனைப் பற்றி 22 (இருபத்து இரண்டு) கடவுள் வாழ்த்து ஒன்று என நூற்று எட்டு(108) ஆகும். ஒவ்வொரு மன்னனைப் பற்றியும் அகம் புறம் என பிரித்து ஆராயப் பட்டுள்ளது.

அகத்துறைப் பாடல்கள் பெரும் பாலும் கைக்கிளைச் செய்யுள்களாகவே உள்ளன. கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். மன்னர்கள் மீது காதல் கொண்டு பெண்கள் தங்கள் காமத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தவை. இவை பெண்பாற் கைக்கிளை என்றும் கூறப்படும். மன்னர்களின் வீரம், எழில் இவைகளின் பெருமை அறிந்து மகளிர் மையல் கொள்வதாக அமைந்த ஒன்று.

முத்தொள்ளாயிரம் கற்பனைக் களஞ்சியமாய் இன்பக் கடலாய், வீரத்தின் விளை நிலமாய், உவமைகளின் ஊற்றாய் அமைந்த ஒரு இலக்கியம் ஆகும்.

இதில் ஒரு பானைச் சோற்றில் ஒரு பருக்கை போல ஒரு பாடல்
பொதுவாக குற்றம் செய்தால்தான் தண்டனை, குற்றம் செய்யாமலிருந்தால் தண்டிப்பது முறையில்லை தானே! சோழனைப் பற்றிக் கூறும் பொழுது ஒரு பெண் கூறுகிறாள்.
என்னுடைய கண்கள் மன்னனைப் பார்த்தது. என்னுடைய நெஞ்சம் அவனோடு கலந்தது. இரண்டும் குற்றம் செய்தன. ஆனால் ஒரு குற்றம் செய்யாத என் தோள்கள் தண்டிக்கப் பட்டு மெலிவடைந்துள்ளதே ஏன்? என்று தான் காதலால் வாடும் குறிப்பைத் தெரிவிப்பதாக அமைந்த பாடல்.

கண்டன உண்கண்
கலந்தன நல் நெஞ்சம்
தண்டப் படுவ
தடமென் தோள்
……. என்று கேட்பதான வரிகள்.

பாண்டியனைப் பணியாதார் நாடு நகரம் முதலியவற்றை இழப்பது சரி! பணிந்து கைதொழுத நானுமா என் பருவ அழகு முதலியவற்றை இழக்க வேண்டும்? என்பதை கற்பனை நயஞ்செரிய ஒரு பாடல்…..

களியானைத் தென்னன்
இளங்கோவென்று எள்ளிப்
பணியாரே தம் பார்
இழக்க – அணியாகங
கைதொழு தேனும்
இழக்கோ, நறுமாவின்
கொய்தளிர் அன்ன
நிறம் …..
(பாடல் 56)
(தென்னன் என்பது பாண்டியர்களுக்குரிய குடிப் பெயர்களுள் ஒன்று)

மற்றொரு பாடல்

சேர மன்னன் உலா வரும் போது அவன்பால் காதல் கொண்ட மங்கையொருத்தி அவனைப் பார்க்க விருப்பத்தோடு தன் வீட்டு வெளிவாசலுக்கு வந்தாள். உடனே நாணம் வரத் திரும்பி உள்ளே செல்கிறாள். பின் ஆசை உந்தச் சென்று நாணம் வரத் திரும்பினாள். இவ்வாறாக உணர்ச்சி வசப் பட்டு உள்ளந்தடுமாறினாள். சீரும் சிறப்பும் பெருஞ் செல்வமும் படைத்த ஒருவர் காலம் செய்த சதியின் காரணமாக வறியவராகிப் பெருஞ்செல்வர்களிடத்து உதவி கேட்கச் செல்ல நேரிடுவதுண்டு; அப்போது செல்வர்களிடம் வறுமை தூண்டச் சென்றும், பின் நாணம் இழுக்கத் திரும்பியும் ஒரு முடிவுக்கும் வராது மனது அலையும் நிலையை உவமையாகக் காட்டும் ஒரு பாடல்:

ஆய்மணிப் பைம்பூண்
அலங்குதார்க் கோதையை
காணியச் சென்று கதவடைத்தேன்- நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்துப்
நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு!

ஒப்புமை

காமமும் நாணும் உயிர்க்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து (குறள் -1163)

இப்படி இன்பச் சுவையூட்டும் அகத்திணைப் (கைக்கிளை) பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம்.

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
24-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives