January, 2022 - Lemuriya Foundation - Page 2

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 16
நேரச்செலவு : 6 நிமையங்கள் / 15-01-2022

பெரும்பாணாற்றுப்படை

இன்று சுறவம் (தை) திங்கள் இரண்டாம் நாள் – உழைக்கும் தமிழர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் நன்னாள்; இது உழவர் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ் நாடு அரசு இந்நன்னாளை திருவள்ளுவர் நாள் எனவும் அறிவித்துள்ளது.

நற்றமிழ் உறவுகளுக்கு எம் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்

இயற்கைக்கும் தன்னுடன் உழைக்கும் விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக திருநாளாகக் கொண்டாடுவது தமிழினம் மட்டுமே!

எனவே தான் நம் பொதுமுறைப் புலவர் திருவள்ளுவர்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ( குறள் 1031)

என்று உயர்வாகப் பகர்ந்து வைத்தார்.

சங்க இலக்கியங்களிலும் பின்னர் செயப்பட்டச் சில காப்பியங்களிலும் பொங்கல், உழவு குறித்துப் பேசப்பட்டிருப்பினும் நாம் இன்று அறிமுகம் செய்யவிருக்கும் பெரும் பாணாற்றுப்படை முகாமையான ஒரு நூலாகும்.

பத்துப் பாட்டுத் தொகுப்பில் பெரும்பாணாற்றுப் படை என்னும் இந்நூல் ஆற்றுப்படை நூல்களில் பெரியதாகும். தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த இளந்திரையன் என்ற மன்னனின் மாட்சி குறித்தும், அவனுடைய ஆட்சித் திறன், நாட்டின் இயல்பு, கடற்கரை எழில், கலங்கரை விளக்கம், மலை வளம் குறித்தும் பாடப்பட்ட நூல் ஆகும்.

இதைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்க காலப் புலவராவார். பத்துப் பாட்டில் வகைப் படுத்தப் பட்டுள்ள பட்டினப் பாலை என்னும் இலக்கியத்தைப் படைத்தவரும் இவரே ஆவர்.

அகவல் ஓசையதாகிய ஆசிரியப் பாவால் இயற்றப் பட்டுள்ளது.

பெரும்பாண், பெரிய பாண் எனப் பொருள் படும். அதாவது பெரிய பாட்டு என்பதாகும். அக்காலத்தில் பாடுவதற்கென ஒரு வகுப்பினர் இருந்தாலும் அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து இசையோடு ஒன்ற இனிது பாடுவோர் பெரும்பாணர் என அழைக்கப் பட்டனர். பாணரை அவர் பண்பால் பாண் என்று கொண்டு அவரை ஆற்றுப் படுத்தியமையால் பெரும்பாணாற்றுப் படை என பெயர் கொண்டதாகும்.

தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட மற்றொரு பெரும்பாணனிடம் தொண்டைமான் இளந்திரையனைச் சென்று பார்த்து தன் வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு வழிப்படுத்துவதாக இவ்விலக்கியம் படைக்கப் பெற்றுள்ளது.

இந்த இலக்கியம் 500 அடிகளைக் கொண்ட பாடல்களால் ஆனதாகும்.

அரிதாகிய இந்நூலில் சீரிய கருத்து நயம், உவமை அழகு, அரிய தொடர்கள் என அனைத்தும் கற்போரை கவர்ந்திழுக்கக் கூடிய ஒன்றாகும். பழங்காலத்து நாடு, நகரம், புள், விலங்கு, பழக்க வழக்கம் என பல்பொருள் பற்றிப் பேசுவதால் இதை ஒரு வரலாற்று நூலாகவும் கொள்ளலாம். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள், அவற்றின் ஒழுக்கம் காட்சிப் படுத்தப் பெற்றுள்ளது.

உமணர், எயினர், கானவர், கோவலர், ஆயர், வலைஞர் என பல வகையான மக்கள், அவர் தம் குடியிருப்புகள், வாழ்க்கை நிலை, உணவு, விருந்தோம்பல் பற்றியச் செய்திகள் வியப்பூட்டும் வகையில் உவமை நயத்துடன் சொல்லப் பட்டுள்ளது.

அகலிரு விசும்பில் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல் கதிர்ப் பருதி…..

பகற்பொழுதை உலகத்தே தோற்றுவிக்கும் ஞாயிறு எனத் தொடங்கி

களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே….

என இறுதியாக 500 அடிகளுடன் முற்றுப் பெறுகிறது.

பாணன் தன் யாழின் பெருமை வருணனையுடன் தொடங்கி அவன் வறுமையைக் கூறுவதாக அமைந்த பாடல்

வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்,
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!

மார்பின் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு கொடிய வெப்பம் வீசும் கதிரவனுடன் நிலவும் வலமாகத் திரிகிற குளிர்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில் உங்களைப் பாது காப்பவரைப் பெறாமல் – மழையின்றி அனலாய் இருக்கிற மலைப் பகுதியில் பழுத்த மரத்தைத் தேடி அலையும் பறவைகள் போல் – அழுகை ஒலியுடைய சுற்றத்தாருடன் உடல் பொலிவற்று கற்ற கலையை வெறுக்கும் உள்ளத்துடன் வருகின்ற பாணனே!

குறிஞ்சி நில மக்கள் : மகளிர் ஆடவர் நிலை

யானை தாக்கினும், அரவு மேல் செலினும்
நீல் நிர விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூழ்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக் கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத்து அன்ன, புல் அணல் காளை
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
ஒல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மறத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோ ஓச்சி வல்ன் வளையூஉப்
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண்தலை கழிந்த பின்றை…..

குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் வீரமும் துணிவும் மிக்கவர்கள். கருவுற்றிருக்கும் பெண்கூட யானை தாக்கினாலும் பாம்பு தங்கள் மேல் ஊர்ந்து சென்றாலும் வானத்தில் பேரிடி இடித்தாலும் அச்சம் அடைய மாட்டாள். ஆண் புலி போன்ற ஆண் மகன் பகைவரின் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுத்து அந்தக் கள் மட்டுமன்றி வீட்டில் அரிசியால் ஆக்கியத் தோப்பிக் கள்ளையும் பருகி ஆட்டிறைச்சியைத் தின்பான். பகல் வேளையில் மாட்டுத் தோலால் செய்த தண்ணுமை என்ற மத்தளம் கொட்டத் தன் வலிமையான தோள்களை வில் ஏந்திய இடத்தோளை வலப் பக்கமும் வலப் பக்கத் தோளை இடப் பக்கமும் சாய்த்து வளைத்து ஆடி மகிழ்வார்கள்.

மேலும், முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளுக்கும் மக்கள் வாழ்வியல் சூழலைப் படம் பிடித்துக் காட்டும் எண்ணற்றப் பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது என்று தடுமாற்றம் கொள்ளும் அளவு ஓர் அழகுத் தொகுப்பாக அமைந்துள்ளது பெரும் பாணாற்றுப்படை.

………………. செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி,

புன்செய் நிலத்தில் உழவர்கள் காளைகளை ஏரில் பூட்டி, கொழு நன்கு மூழ்கும் படி பலமுறை நிலத்தை உழுதனர்; விதைத்தனர், களை எடுத்தனர் என்ற செய்தி தமிழர் தொன்மைப் பயிர்த்தொழிலை பறை சாற்றுவதாகும்.

அதைப் போன்று நன்செய் நில வேளாண்மையைக் கீழ்க் கண்ட வரிகள் புலப்படுத்தியுள்ளன.

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்
களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்

என்ற வரிகளில் தென்படும் வினைஞர் என்ற சொல் உழவரையும், களைஞர் என்ற சொல் களை எடுக்கும் தொழிலாளர்களயும் சுட்டுகிறது. எவ்வளவு அருமையானத் தொழில் பெயர்கள்! அதுபோலவே பிறிதொரு இடத்தில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் மக்களை “வலைஞர்” என்ற சொல்லாலும் பெரும்பாணாற்றுப் படைச் சிறப்பித்துள்ளது.

நெற்குவியல் குறித்தும் மருத நில உழவர் பெருங்குடியினர் வளம் செப்பும் அடிகள்

செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றுந்
தண் பணை தழீஇய தளரா இருக்கை…

என்பனவாகும்.

ஏணி எய்தா நீள்நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல்

உழவர்களின் நல் இல்லங்களில் ஏணீயும் எட்ட முடியாத அளவு உயரமான நெற் குதிர்கள் இருந்தன என்ற செய்தியை மேற்கண்ட வரிகள் விளம்புகின்றன!

உழவர்களின் விருந்தோம்பல் குறித்த செய்தினை

தொல்பசி அறியாத் துளங்க இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்!

இதில் சொல்லப் பட்டுள்ள “தொல்பசி அறியா” – பசி என்பதை அறியாத வளமான ஊர் எனவும், வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி – உழவர் தரும் வெண்ணெல் உணவு என்றும் பொருள் படும்! தமிழர் வேளாண்மையின் சிறப்பை இதைவிட எங்கனம் எடுத்துக் காட்ட இயலும்?

செவ்வியல் இலக்கியம் குறித்த அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக யான் எழுதும் இத்தொடரில் இன்று இயல்பாகவே உழவர் திருநாளில் உழவு, உழவர், நெற்போர்க் களம், நன்செய், புன்செய் நிலம் குறித்து விவரிக்கும் பெரும்பாணாற்றுப் படை என்ற இந்த இலக்கியம் மிகவும் பொருத்தமாக இன்று அமைந்துள்ளது உழவர் நாள் விழாவின் சிறப்பாகும்.

இன்னும் எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள்! மலைத்தேன் இனிமை கண்டு நானும் மலைத்தேன்! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
15-1-2022.

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 3 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 15
நேரச்செலவு : 2 நிமையங்கள் / 14-01-2022

இன்று சுறவம் (தை) திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்! உழைப்பாளர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் பொங்கல் நன்னாள்; தமிழர் திருநாள்!

நற்றமிழ் உறவுகளுக்கு எம் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்

இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக கழனி விளைந்து கதிரைப் பறித்து, கரும்பை நட்டுக் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள். தமிழர்களின் உயிர்ப்பாய், உணர்வின் உறுதியாய், உழைப்பின் தொடர்ச்சியாய்த் திகழ்வது தைப்பொங்கல் மட்டுமே! குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என நிலம் திரிந்தாலும் மருத நிலத்தின் மாட்சியே உலக மக்களுக்கெல்லாம் உணவை வழங்கிய உழவுத் தொழிலாகும்.

எனவே தான் நம் முப்பாட்டன் வள்ளுவன்

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ( குறள் 1031)

எனப் பகர்ந்து உழவுத் தொழிலின் உயர்வை உலகறியச் செய்தான்.

வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்

என்ற புறநானூற்றுப் பாடல் தைத் திருநாளில் செந்நெல்லினை அறுத்துக் கரும்பினைக் கட்டி, கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் விழாக் கொண்டாடப் பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவன் பாடுகின்றான்.

அதைப் போல சிலப்பதிகாரத்தில்

புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

என்ற வரிகள் பொங்கல் வைத்து வழிபடும் முறையைச் செப்புகிறது.

மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் – (சீவ.சிந்த)

என சீவக சிந்தாமணியில் புதுப்பானை பொங்கல் குறித்து நேரடியாகப் புலப்படுத்தப் படுகிறது. இது உலகெங்கும் அறுவடைத் திருவிழாவாக வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது.

சங்க காலம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் உயிர்த் தொழில் உழவும் பொங்கலும் பேசப் பட்டாலும் பெரும்பாணாற்றுப் படை என்ற இலக்கியத்தில் தான்

குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும்பகடு புதவில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு ……. (பெரும்பாணாற்றுப் படை)

ஏர்க் கலப்பை, கொழு, உழவர், காளைகள், நாற்று நடுதல், களையெடுத்தல், முல்லை நில புன்செய் உழவு, மருத நில நன்செய் உழவு, போரடித்தல், களத்து மேடு, நெல்மலை, வைக்கோல், நெற்குதிர், உழவர் விருந்தோம்பல் என அனைத்தையும் பேசும் ஓர் அற்புதமான இலக்கியமாகத் திகழ்வது பெரும் பாணாற்றுப்படை யாகும்.

இன்று தொடங்கி நாளை வரை அவைகள் குறித்துப் பேசவும் எழுதவும் முடியுமெனினும் நாளை உழவர் திருநாள், மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தையும் சேர்த்து அவ்விலக்கியத் துளிகளைச் சுவைப்போம்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்புக்கு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
14-1-2022









தைத் திங்கள் முதல்நாளின் திருவிழா!
தமிழர் திருநாள் பூத்தது புது மலராய்;
புத்தரிசி புது மஞ்சள், கொத்தாம் இஞ்சி;
தித்திக்கும் கரும்பு, புத்தாடையென
புத்தாண்டில் எத்திக்கும் எதிரொலிக்கும் இன்பம்
“பொங்கலோ பொங்கல்” 
“பொங்கலோ பொங்கல்”!
சொத்தான நம் செந்தமிழில் 
முழங்கிடும் வேளை இது!

கருவில் தொடங்கி கல்லறையில் முற்றுப் பெரும் மனித வாழ்வின் நெடும் பயணம்; வாழ்க்கையின் வழித்தடம்; வரலாற்றின் தொடர்ச்சி என அனைத்தையும் அளந்து காட்டும் காலக் கருவியே ஓரை, நாள், வாரம், திங்கள், ஆண்டு என்பன ஆகும். அண்டத்தில் ஆங்காங்கே சுழன்று கொண்டிருக்கும் கோள்கள், விண்மீன்கள் வெளிப்படுத்தும் இயற்கை இயல்புகளுக்கொப்ப ஆண்டு, திங்கள், வாரம், நாள், நாழிகை என காலத்தின் வகைகளை வகுத்துக் கொண்டு பகுத்தறிவின் பயனால் மாற்றங்களைக் கண்ட ஒரு விலங்கு மனித விலங்கு மட்டுமே.

தை பிறந்தது; விடிந்தும் விடியாதது போன்று முதிர்ந்தும் கடந்தும் போனது ஓர் ஆண்டு! மலைகள், கடல்கள், காடுகள், நதிகள், வயல் வெளிகள் என நாடோடிகளாய் வாழ்ந்த மனித இனம் வரலாற்றின் தொடர்ச்சியில் வளர்ச்சியில் அறிவின் முதிர்ச்சியில் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், நாடு, எல்லை, குமுகம், சட்டம், ஆட்சிமுறை என வகைப்படுத்தி வாழ்க்கையை அமைத்துக் கொண்டது.

வளர்ந்த பின்பு பரந்தும் பிரிந்தும் வாழ்கின்ற சூழலில்….

“குலமும் ஒன்றே குடியும் ஒன்றே”
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழிலில் வேற்றுமை யான்?”
“எல்லாரும் இன்புற்றிருக்க அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே”
“வாடியப் பயிரைக் கண்டபொதெல்லாம் வாடிடும் என் மனம்” “காக்கைக் குருவி எங்கள் சாதி பெரும் காடும் மலையும் எங்கள் கூட்டம்”
“போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்”
“அறம் செய விரும்பு; ஆறுவது சினம்”
“சிந்தையின் நிறைவே செல்வம்”
“அன்பின் வழியது உயிர்நிலை”
“கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு”

என ஒப்பற்ற பல சொற்கோவைகளை உலகுக்களித்து நம் இனத்தின் அகம் காட்டி செந்தமிழின் முகம் காட்டி நல் எண்ணங்களின் நாற்றாங்காலாய் விளங்கியது தமிழினம் ஆகும்.

உயிரையும் உணர்வையும் வளர்ப்பது தமிழே என்பது புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் கூற்று!

வையமெல்லாம் போற்ற வளமுடன் வனப்புடன் வானளாவ வாழ்ந்து பசும்பொன்னைத் தோண்டி பாருக்கெல்லாம் வழங்கிய நம் இனம் இன்று விசும்பியும் விழி பிதுங்கியும் நிற்பவர்களாய் காட்சியளிக்கின்றனர். பிழைக்கத் தெரிந்த பிறவிகள் இங்கே எப்படியெல்லாமோ பிழைத்துக் கொண்டிருக்க உழைக்கத் தெரிந்த அளவுக்கு உழைப்பிற்கேற்ப தழைக்கத் தெரியாமால் உலகெங்கும் தவித்துக் கொண்டிருக்கும் இனமாக தமிழினம் விளங்குகின்றது.

அறம் பாடிய அவ்வையும், நன்னெறி வாழ்வின் அடித்தளம் அமைத்த திருவள்ளுவரும், தொல்மரபின் தொடர்ச்சியை எடுத்தியம்பி இலக்கணம் வகுத்த தொல்காப்பியனும் நம் அரசியல் அறிஞர்கள்!

குடிமக்களின் விருப்பத்திற்கிணங்க குடவோலை சீட்டு வைத்து மக்களாட்சி முறையை வகுத்த மதுராந்தகன் என்ற தமிழ் மன்னன் ஒரு அரசியல் சிந்தனையாளன்! சாதி மதம் சமுகக் கேடுகளை அகற்றச் சலிப்பின்றி உழைத்த மாமனிதன் தந்தை பெரியார் ஒரு சமுக அறிவியலாளன்! தமிழ் நாடு தந்த நம் அண்ணா ஓர் அணையா விளக்கு! பாவாணரும், பெருஞ்சித்திரனாரும் நம் படைத் தளபதிகள்!

எனினும் சனநாயத்தின் ஊற்றாக விளங்கி புவியோர்க்குப் புதிய சிந்தனையை தாய்ப்பாலாய் ஊற்றி வளர்த்த தமிழினம் தற்போது தன் மொழி, இன, பண்பாட்டு இறைமைக்காவும், உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது.

“ஒப்பிலாதது ஒருமைப்பாடு”; “ஒருதாய் மக்கள்” “ ஒரே நாடு” என்றெல்லாம் உரக்க ஒலிக்கும் இந்திய நாட்டில் தான் தமிழினம் வேற்று நாட்டவரைப் போல வேம்பாய் வெறுக்கப் படும் வேதனைக்குரிய நிலை; தோண்டக் கிடைக்கும் தொன்மைத் தமிழரின் மரபுகளும், பண்பாட்டு அடையாளங்களும் மொழியின் வளமையும், வரலாற்றுச் சுவடுகளும் வடவர்களால் திட்டமிட்டே சிறுகச் சிறுக அழித்தொழிக்கப் பட்டு வருகின்றன.

தமிழர் சிலரின் பதவிப் பித்தும் பல்லிளிக்கும் போக்கும் பொருள் மோகமும் நுகர்வுக் கலாச்சாரத்தின் முற்றுகையும் தமிழரின் மருத நில வேளாண்மைக் கூறுகளை வேரறுக்கச் செய்து விட்டன. பொருள் மயக்கம் பெருகி குமுகாயத்தில் வறுமைக்கும் வளமைக்கும் உள்ள இடைவெளியை அகலப் படுத்தி விட்டன. தமிழர்களின் வெற்று உணர்ச்சிகளும் வெறுமைக் கிளர்ச்சிகளும் தமிழ்ப் பகைவர்கள் பலரின் பாதகச் செயல்களுக்கு பல்லக்குத் தூக்குவதாய் அமைந்துள்ளன.

சனநாயகப் போர்வையில் வடவர்களின் சாதியும் மதமும் சனாதன வெறியும் கோலோச்சுகின்றன. நாட்டின் இறையாண்மையை அரித்தொழிக்கும் கரையான்களின் எண்ணிக்கை பரந்தும் விரிந்தும் வருகிறது. கெடுமதியாளர்களின் விருப்பங்களுக்கொப்ப மரபுகளை சட்டங்கள் மீறுகின்றன; சட்டங்களை சில வேளை மரபுகள் மீறுகின்றன. மூடநம்பிக்கைகளுக்கு முலாம் பூசப்பட்டு தனிமனித நம்பிக்கையாகவும் பாரதப் பண்பாடு எனவும் பகிரப்படுகின்றன. நயன்மை மன்றங்கள் மதம்சார் விடயங்களில் வாய் மூடிகளாகவும், முடவர்களாகவும் உள்ளன!

தமிழ் நாட்டு கட்சி அரசியலில் கால்களைத் தேடும் கயமையும் மடமையும் பொய்யும் புனைவும் வழுவும் வழிபாடுகளுமே நஞ்சுக்கு நிகராய் மிஞ்சியும் எஞ்சியும் இருக்கின்றன. வாக்குச் சீட்டுகள் சிலருக்கு வாய்ப்பளித்த போதெல்லாம் வழுவும் வருவாயும் பெருகின. தமிழர் உரிமையும் உணர்வும் அருகின. ஈழத் தமிழரின் இறைமை அழிந்தது. இன வலிமை ஒழிந்தது. வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களின் கீழ்ச் செயலும் வளமான நம் தமிழ் மண்ணில் வாடும் பயிரையும் மேய்ந்து வறட்சியையே ஈந்தன.

இனியும் விழிப்பில்லையெனில் விடியல் என்பது தமிழினத்திற்கு வெறும் கனவாகவே மாறிவிடும். ஏற்கனவே இழந்தது ஏராளம். இளந்தலைமுறையின் எதிர்காலம் இனியும் கேள்விக்குரியதாகி விட வேண்டாம். தமிழ் மொழியின் காப்பும், தமிழர் உரிமை மீட்பும் நம் மூச்சுக் காற்றின் முகாமையாகட்டும்!

நம் வரலாற்றுச் சீர்மைகளை வாழ்க்கையின் வடிவங்களாக மாற்ற வேண்டிய தருணம் இது. சிந்தைத் தெளிவுடன் சிற்றிளங்காளைகள் களத்தில் இறங்க வேண்டிய காலம் இது. மாணவ மணிகளே உங்களுக்குக் கடமை காத்திருக்கிறது. மக்கள் வலிமை மட்டுமே இனி மாற்றத்தை முன்னெடுக்க முடியும். நுழைவுத் தேர்வுகள் எனும் பெயரில் நுண்மான் நுழைபுலம் மிக்க மாணவர்களின் கனவுகள் காயடிக்கப் படுக்கப்பட்டு கலைக்கப் படுகின்றன.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடிகொண்டது போல் தமிழனின் கட்டமைப்புகளில் வட இந்தியரின் வல்லாண்மை மேலோங்குகிறது! தேளின் கொடுக்காய் கொட்டி ஒளிவோரை தெரிந்து கொண்டு செயலாற்ற உறுதி பூணுவோம். தூக்கமா இன்னும்? தட்டி எழுப்புங்கள்! துயில்வோரே எழுந்திருங்கள்! இனியும் கண் மூடியிருந்தால் உன்னை மண் மூடும்! இது திண்ணம்!

தமிழுக்கும் அமுதென்று பேர்! தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்! என்ற புரட்சிக் கவிஞனின் புகழ் மிக்க வரிகள் நம் குருதியில் கலந்து பழந்தமிழர் கலை ஒழுக்கம் பண்பாடு காக்கும் பறையாய் விண்ணதிர முழங்கட்டும்.

இனமும் மொழியும் உடலும் உயிரும் போன்றதாகும்.

கடந்து போன ஆண்டின் கசடுகளை மறந்து புத்தாண்டில் புதுப் பொலிவுடன் நல்லன விளைந்திட நம்பிக்கையுடன் களம் காண்போம். நல்வினைகள் நமக்கு நாற்றாங் கால்களாகட்டும். இருட்டறையில் இனியும் தமிழ் மக்கள் இருப்பது தீதாகும். நம் ஒற்றுமையினைச் சிதைக்கும் கூறுகளைச் சிதைப்போம்!̀ முரண்கள் தவிர்த்து அரண்கள் அமைப்போம்!

அழகு தமிழின் அருஞ்சுவை அருந்தி அறிவியல் கண்கொண்டு அறிவாற்றல் பொங்கும் அன்பை விதைப்போம். உறவுகளை வளர்ப்போம்! ஒற்றுமையை விதைப்போம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வென உணர்வோம்! உரிமைகளைக் காப்போம்!
இனி அடிமைத் தளை அறுத்து விடுதலை கொள்ள ஏற்ற செயல் செய்திடுவோம்! சூளுரைப்போம்!

இளங்காலை திரை நீரில் முகிழ்க்கும் கதிரவன் வரவினில் புத்தரிசிப் பொங்கலிட்டு முழங்குக பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

கனியனைய என் தமிழ்ச் சொந்தங்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

வாழ்க தமிழ்! தமிழும் நாமும் வேறல்ல!
தமிழே நம் வேர்!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல். - (திருக்குறள்)

கனிவுடன்,
சு.குமணராசன்
மும்பை.
நாள்: தை – க –
திருவள்ளுவராண்டு உ0ருங (14-01-2022)
தொடர்புக்கு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 14
நேரச் செலவு : 5 நிமையங்கள் / 13-01-2022

சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியத் தொகுப்பாக விளங்கும் பத்துப் பாட்டு வரிசையில் மூன்றாவதாக இடம் பெரும் நூல் சிறு பாணாற்றுப்படை ஆகும். ஆற்றுப் படை இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்நூலாகும். மன்னனிடம் பரிசு பெற்று வந்த சிறுபாணன் ஒருவன் வழியில் மற்றொரு சிறுபாணன் ஒருவனைக் கண்டு அவனை அவ்வள்ளல் பால் ஆற்றுப் படுத்துவதாகப் பாடப்பெற்ற ஒன்று இதுவாகும். பாணர் என்போர் பாடுபவர். இவர் யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலராவர். இதில் கூறப் படுபவர் யாழ்ப்பாணர். அதனுள்ளிலும் சிறுபாணர், பெரும்பாணர் என்று வகையுண்டு.

இந்த நூலில் வருகின்ற பாணன் சிறுபாணன் ஆவான்.

இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இவர் ஓர் நல்லிசைப் புலவர்.

சிறந்த செந்தமிழ் நூலான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் வள்ளல் தன்மை கொண்ட ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்பவன் ஆவான். இவன் மாவிலங்கை என்னும் தலைநகரிலிருந்து ஓய்மா நாட்டை ஆண்டு வந்தான்.

  • இப்பாடல் 269 அடிகளைக் கொண்டது ஆகும்.
  • இதன் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என கணித்துள்ளனர்.
  • சிறுபாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்),
  • விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்),
  • பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்),
  • சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்),
  • உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்),
  • வள்ளல்களில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்),
  • வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்),
  • பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்),
  • மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்),
  • நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்),
  • வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்),
  • அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்),
  • நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்),
  • தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்),
  • ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்),
  • வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்),
  • விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்)
  • ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும்.

தமிழ்நாட்டில் சிறப்பாகப் பேசப்படுகின்ற கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய் அண்டிரன், நள்ளி ஆகியோரின் வள்ளல் தன்மையினைச் சிறப்பாகப் பேசி அவர்களை விடச் சிறந்தவன் நல்லியக் கோடன் என்னும் பொருள் பட அமைந்த பாடல்கள் அவன் கொடையின் மாண்பை உணர்த்துவன. மேலும் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் வண்ணனை, பாணனின் வறுமை நிலை, எயிற்பட்டினம், வேளூர், ஆமூர் ஆகிய ஊர்களின் விவரங்கள், வஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய நகரங்களின் காட்சி அமைப்புகள் என பலவும் படிக்கப் படிக்க உள்ளத்திற்கு உவகை அளிப்பனவாகும்.

காட்டிடத்தே திரிகின்ற மயிலானது குளிரால் வருந்துகிறது போலும் என எண்ணி அம்மயிலுக்கு தன் போர்வையை அளித்த வள்ளல் தன்மை மிகுந்த பேகனை

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான் மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் –
என்ற வரிகள் மூலமும்

முல்லைச் செடியானது தன் தேரைத் தடுத்திடவே, அது பற்றிப் படர்வதற்கு தன் தேரினை வேண்டுகின்றது போலும் என்று கருதி தன் பெரிய தேரினை அளித்திட்ட பறம்பு மலை வேந்தன் பாரி என்னும் வள்ளல் குறித்து

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்
என்ற வரிகள் மூலமும்

நள்ளி என்ற பெயர் கொண்ட மலைநாட்டு மன்னன் குறித்து

நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வழிதுஞ்சு நெடுங்காட்டு
நளிமலை நாடன் நள்ளி –
எனப் பாராட்டும் வரிகள் நயம் பயப்பவை.

இவற்றைத் தாண்டி நல்லியக் கோடனின் நற்பண்புகள் குறித்து

செய்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கும் சிறப்பின் அறிந்தோர் ஏத்த ( 207-209)

பாடப்பெற்ற இவ்வடிகள் திருக்குறளை நினைவூட்டுவது போன்று அமையப் பெற்றுள்ளது இந்நூலின் சிறப்புகளில் ஒன்றாகும்.

“மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்
நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”

என்ற செய்யுள் வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளைஞர்கள,. முறுக்கேறிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழைத்தம் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான்.

நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளண்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்பமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது

சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாணனின் வறுமை என்பது,

“……………….இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
அழிபசி வருத்தும் வீடப் பொழில்கவுள்…..

என்ற பாடல் வரிகள், பாணனின் சமையல் கூடம் எவ்வாறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூரை இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான்.

இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறு, வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் இல்லாமல் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர் என்று விளம்புவதாக உள்ளது.

இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர் என்பது நமக்குக் கிடைக்கும் செய்தியாகும்.

இவ்வாறாக ஏழு வள்ளல்களின் அரிய வரலாறு நல்லியக் கோடனின் கொடைச் சிறப்பு, ஊர்களின் சிறப்பு, குறிப்பறிந்து கொடுக்கும் தன்மை என பல செய்திகளின் கதம்பம் சிறுபாணாற்றுப்படை ஆகும். படித்துக் களிப்புறுவீர் தமிழ் மக்களே!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
13-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 13
நேரச் செலவு : 4 நிமையங்கள் / 12-01-2022

பொருநராற்றுப்படை

சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒளி முத்துகளாகத் திகழ்பவை ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். அதில் இரண்டாவதாகத் திகழ்வது இன்று நாம் காணவிருக்கும் பொருநராற்றுப்படை.

ஆற்றுப்படைகளுள் பாணரால் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை; பொருநரால் ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படை; கூத்தரால் ஆற்றுப்படுத்தப் படுவது கூத்தராற்றுப் படையாகும்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்க அறிவுறீஇச்
சென்று பயனெ திரச் சொன்ன பக்கமும் (தொல்:புறத்திணை)

என வரும் பகுதியே ஆற்றுப்படைக்கு இலக்கணமாம்.

கலைச் செல்வம் பெருகியிருந்த பழந்தமிழகத்தில் பாணரும் கூத்தரும் பொருநரும் பிற கலைஞர்களும் சிறந்திருந்தனர். முடியுடை வேந்தர் மூவர் ஆண்ட தமிழகத்தில் அவ்வரசர்கள் மீது நல்லிசைப் புலவர்கள் பலர் சொல்லிசையில் நன்மாலை புனைந்தனர். அவர்கள் பரிசில் பெற்று திரும்பும் வழியில் எதிரே வரும் புலவர்களுக்கு “இவ்வழியாகச் சென்று மன்னனைப் பார்த்துப் பரிசில் பெறுக” என்று வழிகாட்டுவது ஆற்றுப் படுத்தல் ஆகும். அவற்றுள் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் மீது பாடிய பாடல்கள் தான் பொருநராற்றுப்படை என்ற இந்த நூலாகும்.

பொருநர் என்போர் ஏர்க்களம் பாடுவோர்; போர்க்களம் பாடுவோர்; பரணிபாடுவோர் என்று பல வகையாக உள்ளனர். இந்தப் பாடலில் வரும் பொருநர் தடார் என்னும் பறையைக் கொட்டுபவர்.

இப்பாட்டு 248 அடிகளால் ஆனதாகும். பாடல்கள் பெரிதும் அகவல் அடிகளால் அமைக்கப் பட்டதெனினும் இடையிடையே வஞ்சி அடிகளாலும் விரவி வருவதால் ஓசை நயம் மிகுந்து காணப் படுகின்றது.

பொருநன் வாயிலாக கரிகால் பெருவளத்தான் புகழனைத்தும் இப்பாட்டின்கண் பாடப்பெற்றுள்ளது. இப்பாட்டு சோழனை “கரிகாலன்” என்றே வழங்குகிறது. இவன் வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சேரனையும், பாண்டியணையும் இறக்கச் செய்தான். இவன் பொருநராற்றுப்படைக்கும், பட்டினப் பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் ஆவான். எனினும் ஆய்வாளர் சிலர் இதனை மறுக்கின்றனர். கரிகால் வளவனும், திருமாவளவனும் வேறானவர்கள் என்ற கருத்தும் உண்டென்பர்.

இப்பாடலை பாடிய புலவர்: முடத்தாமக் கண்ணியார். இவர் ஓர் இசை வல்லுனராக இருக்கக் கூடும் என்பதை பாடலின் உவமைகள் பல விளம்புகின்றன.

இந்நெடும் பாட்டில் கரிகால் பெருவளத்தானிடம் பரிசு பெற்று மீண்டுவரும் பொருநன், விறலி முதலியவருடன் வள்ளலை நாடிச் செல்லும் வறிய பொருநன் ஒருவனை வழியிடையில் சந்தித்து அவனை விளித்தல், யாழின் வருணனை, விறலி வருணனை, பொருநன் வறுமை, தான் சொல்லும் வள்ளலிடத்துச் செல்லுமாறு வற்புறுத்தல், தான் கரிகாலனைக் கண்டமை, கரிகாலன் தன்னை வரவேற்று விருந்து படைத்தமை, பின்பு பரிசில் நல்கியமை, கரிகாலன் பிறப்பும், போர்ச்செயல்களும் அவனைக் காணின் அவன் புதிய பொருநனை உடையாலும் உணவாலும் மகிழ்வளித்து வேண்டும் அணிகலன்களையும், பிறவற்றையும் நல்குபவன்; எழடி நடந்து வழியனுப்புவான் என்பதும், கரிகாலன் சோழ நாட்டு வளம், ஐந்திணை வருணனைகள், காவிரியாற்றின் சிறப்பு ஆகிய அனைத்தும் காணப்படுகின்றன.

இம்மன்னன் வெண்ணிப் போரை

“நளியிரு மந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னற்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பரந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறபுண் ணாணி வடக்கிருந்தோனே”

என்ற வண்ணிக் குயத்தியாரின் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.

பாடினியின் தோற்றப் பொலிவு குறித்துப் பாடுகையில்

அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்க்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குலை ஊசல் பொறைசால் காதின்
நாண் அடச் சாய்ந்த நலங்கிளார் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்(து)
ஈர்க்கிடை போகா ஏர்இள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
வண்(டு) இருப்ப்(பு) அன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற்
பொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாட்(கு) ஒப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி. ( 25-42)

தொகை நூல்களில் புலவர் பெருமக்கள் மகளிரின் அணிநலன்களை, ஏதோ ஓருறுப்பு அல்லது இரண்டு உறுப்புகளை விவரித்துத் தங்கள் புலமை ஆற்றலை காட்டிய நிலையில் இங்கு ஒரு பெண்ணின் அழகினை தலைமுதல் கால்வரை அனைத்து அழகினையும் விவரிக்கும் விதம் எவ்வளவு அழகானப் பகுதி. ஒவ்வொரு உறுப்பை காட்சிப் படுத்தும் போதும் இயற்கை உவமைகள் கையாளப் பட்டுள்ளன.

கரிகாலன் நாட்டில் பாயும் காவிரியின் மேன்மை குறித்துப் பாடப்பட்டுள்ள செய்யுளில்

மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழழ்த்தவும் மற்றக்
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்பில் காலையும்
நறையும் நரந்துமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த்தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளொர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குலைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே ( 232- 248)

இதில் நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் குறைதோறும் பொறை உயிர்த்து… புனலாடும் மகளிர் கதுமெனக் குடைய என்ற வரிகள் நறை, நரந்தம், அகில், சந்தனம் ஆகியவற்றை மணப்பொஎருளாகக் காவிரி நீர்
கொண்டுவந்து, புனலாடும் மகளிர்க்குப் பரிசிலாக வழங்க என்ற பொருள் பட இயற்றப் பட்ட வரிகளாகும்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
12-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் முடிவை எட்டும் தருவாயில் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 4 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 12
வாசிப்பு நேரம் : 4 நிமையங்கள் / 11-01-2022

திருமுருகாற்றுப்படை

தமிழர்களின் பண்பாட்டையும் நாகரிக மேம்பாட்டையும் வாழ்வியல் ஒழுகலாறுகளையும் அறிந்து கொள்வதற்குரிய ஒரே அடையாளம் நமது சங்க இலக்கியங்கள் என ஏற்கனவே பகன்றுள்ளோம்.

அவற்றுள் தொல்காப்பியம், திருக்குறள் நீங்கலாக காலத்தால் மூத்தவைகளில் பத்துப் பாட்டும் அடங்கும். “மூத்தோர் பாடியருள் பத்துப் பாட்டு” என்று தமிழ் விடுதூது முழங்குகின்றது.

பத்துப் பாட்டில் செம்பாதி பாட்டுகள், ஆற்றுப்படை பாட்டுகளாகவே அமைந்துள்ளன. அக்காலப் புலவர்கள் பெரிதும் விரும்பிப் பாடியத் துறை இதுவென்று உணரலாம்.

பத்துப் பாட்டில் முதல் இலக்கியமாகத் திகழ்வது திரு முருகாற்றுப்படையாகும். இந்த நூலை யாத்தவர் புலவர் நக்கீரர் ஆவார். இவரை நக்கீர தேவ நாயனார், மதுரை நக்கீரர் என்றும் அழைப்பதுண்டு.

இது 317 அடிகளைக் கொண்டதொரு இலக்கியம் ஆகும்.

முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு. அந்தப் பொருத்தம் திருமுருகாற்றுப் படையினை படிப்பவர் நெஞ்சை விட்டு அகலாது.

இப்பாட்டு முருகன் அருளைப் பெற்ற ஒரு புலவன் முருகன் அருளைப் பெறவிரும்பும் ஒருவனை அப்பெருமான் பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த ஒன்று. இதை புலவராற்றுப் படை என்றும் குறிப்பிடுவர்.

இதன் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டையொட்டியது என கணித்துள்ளனர்.

சங்க இலங்கியத் தொகுப்பில் பக்தியுணர்ச்சி நிரம்பிய ஒரு முழு நூல் இதுவாகும். சங்க இலக்கியங்களில் பிற எந்த நூலும் பக்தி பற்றிப் பேசுவதில்லை. பரிபாடலில் மட்டும் சில பாடல்கள் திருமால், முருகன் குறித்து உள்ளன. இதில் அமைந்துள்ள இயற்கை வண்ணணை மிகச் சிறப்பானவை.

ஆறு பகுதிகள் கொண்ட இந்நூலில் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் மலைக் கோயில் பற்றியும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்னும் தலத்தின் பெருமை பற்றியும் கூறி இறுதியில் ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளும் இடங்களும் அவனிடம் சென்று அருள் பெரும் முறையும் பழமுதிர்ச் சோலை அருவியின் சிறப்புகளும் விளக்கப் பட்டுள்ளன.

இப்பாட்டின் தொடக்கத்தில் முருகப் பெருமானின் இறைத்தன்மை காட்டப் படுகின்றது. அதனையடுத்து அவன் திருவுருவச் சிறப்பினையும், அவனைப் போற்றி வானவ மகளிர் ஆடும் சிறப்பினையும் விரிவாகக் காட்டுகின்றார். அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருச்சீலை வாயில்கண் வீற்றிருக்கும் முருகனின் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் அவன் இருக்கும் தன்மையினையும் விரித்துக் காட்டுகின்றார்.

பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் உலகை முன்னுறுத்தியே தொடங்குவது போன்று, இந்நூலின் தொடக்கமும் “உலகம் உவப்ப” என்ற அடியுடன் உலகை முன்னிருத்தியே செயப் பட்டுள்ளது. முருகனின் பெருமை குறித்துப் பேசவந்த புலவர் உலகைக் காட்டிவிட்டுத்தான் தொடர்கிறார்.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோந்தாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (வரிகள் 1-6)

உலகம் என்பது பூமி. பூமியின் கூறுபாடுகள் சான்றோர், உயிர், ஒழுக்கம் ஆகியவை என்று தொடங்குகிறது. உவப்ப என்ற சொல் உயிர் என்ற பொருளைக் குறிக்கும்.

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்(பு) எழுந்(து)இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்ற நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்

என்னும் அடிகள் முருகனை வழிபடும் முனிவர்களைப் பற்றி விளக்குவன.

“மார்பின் எழும்புகள் எழுந்து தோன்றும் உடம்பை உடையவர்கள்; பல பகல் உண்ணாமலே நோன்பால் கழித்தவர்கள்; பகையையும் சினத்தையும் நீக்கிய மனம் உடையவர்கள்; எல்லாம் கற்றவர்களும் அறிய முடியாத மெய்யறிவு பெற்றவர்கள்” என்று முனிவர்களைப் பற்றிய பல செய்திகளைக் கூறும் வரிகள் இவையாகும்.

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல.
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் . . . .
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று.
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. .

பழமுதிர்ச் சோலையின் எழிலழகு

பழமையால் முதிர்ச்சி பெற்ற சோலை அருவி பழம் முதிர்ந்த சோலை அருவி அடித்துக்கொண்டு வரும் பல்வேறு பழப் பொருள்களாவன. அருவி துணிக்கொடியைப் போல் அசைந்தாடிக் கொண்டு வருகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக் கொண்டு வருகிறது. உயர்ந்த மலை முகடுகளில் பாறைப்பொந்துகளில் சூரியனைப்போல் தேன் கூடுகள் இருக்கும்.அவை சிதையப் பாய்ந்து வருகிறது.

ஆசினிப் பலாவின் பழுத்த சுளைகள் கலந்துவரப் பாய்ந்து வருகிறது. மணம் மிக்க நாகமரப் பூக்கள் (புன்னை மலர்கள்) உதிரும்படி மோதித் தாக்கிக் கொண்டு வருகிறது. பருத்த முகமுடைய முசுக் குரங்குகள் நடுங்கும்படி பாய்கிறது. பெண்யானை மகிழும்படி அலை வீசுகிறது. ஆண்யானைகளின் தந்தங்களின் மீது அலை தத்துகிறது. மழைவெள்ளம் பொன்னிறத்திலும் ஊற்றுநீர் மணிநிறத்திலும் அமைந்து பொன்போன்ற விலைமதிப்புள்ள போருளகளை ஈர்த்துக் கொண்டு பாய்கிறது.

வாழைமரத்தை அடியோடு சாய்த்து உருட்டிக் கொண்டு வருகிறது. தென்னை மரத்தைத் தாக்கும்போது உதிர்ந்த இளநீர்க்குலைகளைப் புரட்டிக்கொண்டு வருகிறது. மிளகுக்கொடி மிளகுகுகுலையோடு சாய மோதுகிறது. புள்ளிமயில் மருண்டு தன் கூட்டத்தோடு ஓடப் பாய்கிறது. காட்டுக்கோழிகளும் அவ்வாறே ஓடும்படி பாயந்து வருகிறது. காட்டுப்பன்றியும் அதனை அடித்துத் தின்னும் புலியும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி ஒரே கல்லுக் குகையில் அடைந்து கொள்ளும்படி பாய்கிறது. ஆமா என்னும் காட்டாட்டுக் கடாக்கள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சித்தம் பெண் ஆமாக்களை அழைக்கும் வகையில் அழைப்பொலியை எழுப்பும்படி வெள்ளம் சாய்கிறது. இழும் என்னும் ஓசையுடன் இறங்கிப் பாயும் இத்தகைய அருவிகளைக் கொண்டதுதான் பழமுதிர் சோலைமலை. இத்தகைய சோலைமலைக்கெல்லாம் உரிமை பூண்ட கடவுள் முருகன்.

̀என திருமுருகாற்றுப்படை இலக்கியம் முற்றுப் பெருகிறது.

நக்கீரர் இயற்கையின் அழகில் மிகவும் ஈடுபாடுடையவர் என்பதை திருமுருகாற்றுப்படை காட்டுகிறது. இதைப் போன்ற நக்கீரர் எழுதிய மற்றொரு நீண்ட பாடலாகிய நெடுநெல் வாடையிலும் இயற்கைக் காட்சிகளைக் காணலம்.

தொல்காப்பியரின் சேயோன் என்ற முருகனுக்கும், முருகன் அல்லது அழகு என்ற தமிழ்த்தென்றல் திரு.வி.க கருத்துக்கும் மாறாக முருகனுக்கு ஆறு தலையும், பன்னிரு கையும் படைத்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே .இது காலத்தால் மிகவும் பின்தங்கிய இலக்கியம் என்ற கருத்தும் உளது. கொங்கு தேர் வாழ்க்கைப் பாடிய நக்கீரரும், இதைப் பாடிய நக்கீரரும் காலத்தால் வேறுபட்ட வர்கள், ஒளவையாரில் பல ஒளவையார் இருப்பது போல எனவும் ஆய்வு கூறுகின்றது.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
11-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 11
நேரச் செலவு : 4 நிமையங்கள் / 10-01-2022

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். எட்டுத்தொகை போலவே, பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-

முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

இவ்வெண்பாவின் படி, அந்நூல்கள் திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு

  1. திருமுருகாற்றுப் படை
  2. பொருநராற்றுப் படை
  3. சிறுபாணாற்றுப் படை
  4. பெரும்பாணாற்றுப் படை
  5. முல்லைப்பாட்டு
  6. மதுரைக் காஞ்சி
  7. நெடுநல்வாடை
  8. குறிஞ்சிப் பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை
    என்பனவாகும்.

இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலருடையக் கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினிக்கினியார் உரை எழுதியுள்ளார்.

பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.

பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு (முல்லைப் பாட்டு) 103 அடிகள் மட்டுமே கொண்டது. மிக நீண்ட பாடல் (மதுரைக் காஞ்சி) 782 அடிகளைக் கொண்டது.

பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.

திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இந்த ஆறு நூல்களில் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.

இத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை.

இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்று நிகழ்வுகள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.

பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட்ட கற்பனைகளோ பொருந்தாத உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழர் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன. இதனால் இயற்கை ஓவியம் என்றும் பத்துப்பாட்டு அழைக்கப்படுகிறது.

இத்தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவலோசையால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன.

"நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்".

-(பன்னிருபாட்டியல் 266-267)
என்பது இதன் இலக்கணமாகும்.

திருமுருகாற்றுப்படை – 317 அடிகள் – (புலவர் நக்கீரர்)
பத்துப் பாட்டில் இது காலத்தால் பிந்திய நூல்.

பொருநராற்றுப்படை – 248 அடிகள் – (முடத்தாமக் கண்ணியார்)
கரிகால் சோழனைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்

சிறுபாணாற்றுப்படை – 269 அடிகள் – (நல்லூர் நத்தத்தனார்)
கடையேழு வள்ளல்கள் குறித்த செய்திகளை இங்கு காணலாம்.

பெரும்பாணாற்றுப்படை – 500 அடிகள் – (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
காஞ்சிமாநகரப் பெருமை, யாழின் வண்ணனை குறித்த செய்திகள் இவண் உள.

மலைபடுகடாம் – 583 அடிகள் – (பெருங்கெளசிகனார்)
ஆற்றுப்படை நூல்களில் இதுவே பெரியது. நன்னன் சேய் நன்னன் சிறப்பு – மலைகளில் இயற்கையாக எழும் ஒலிகள் குறித்த செய்திகள்.

குறிஞ்சிப்பாட்டு – 261 அடிகள் – (கபிலர்)
ஆரிய அரசன் பிகதத்தனுக்கு தமிழர் அகப்பொருள் குறித்த அறிவுரை

முல்லைப் பாட்டு – 103 அடிகள் – (நப்பூதனார்)
பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்தும் கார்காலத்தின் சிறப்பையும் இங்கு காணலாம்

பட்டினப்பாலை – 301 அடிகள் – (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
காவிரிபூம்பட்டினத்தின் சிறப்புகள், கடல்வழி வாணிபம் குறித்த செய்திகள்

நெடுநெல் வாடை – 188 அடிகள் – (நக்கீரர்)
கொற்றவை வழிபாடு குறித்த செய்திகளை இவண் காண இயலும்.

மதுரைக் காஞ்சி – 782 அடிகள் – (மாங்குடி மருதனார்)
தூங்கா நகரம் மதுரை, அங்கு நடைபெறும் விழாக்கள் குறித்த பல வரலாற்றுச் செய்திகள் அடங்கிய நூல்.

எதிர்வரும் நாள்களில் மேற்கண்ட நூல்கள் ஒவ்வொன்றும் குறித்து அறிமுகம் காணலாம்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
10-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)

துளி: 10
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 9-01-2022

புறநானூறு

உலகில் பெரும்பாலான மக்கள் தமிழின் தொன்மை மற்றும் அதன் சிறப்புக் குறித்துப் பேசும் போது முகாமையாகப் பயன் படுத்தும் ஓர் இலக்கியம் புறநானூறு ஆகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற செய்யுள் வரிகள் பலராலும் அறியப் பட்ட ஒன்றே!

சங்ககாலத் தமிழ் நூற்களின் தொகுப்பான எட்டுத் தொகை நூல்களுள் புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் இது வழங்கப்படும்

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள்,

150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை.

இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குடிமகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் இதைப் பாடியுள்ளனர்.

இதன் காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர். ஆனால் பாடப்பட்ட மன்னர்கள் கி.மு. 1000 முதல் கி.மு. 300 வரை எனவும் நம்புகின்றனர்.

இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன.

புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் அக்கால மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை வெளிநாட்டு அறிஞர் ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

சங்ககால தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

இந்த நூலில் 267, 268 எண் கொண்ட இரு பாடல்கள் கிடைக்கவில்லை.

புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் நமக்குப் புலனாகிறது.

நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் - (நரிவெருவுத் தலையார்)
உண்பது நாழி உடுப்பது இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்தின் பயனே ஈதல் - (மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார்)
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - (மோசி கீரனார்)
ஈன்று புறம் தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
இப்படி பல பாடல்கள் அடங்கிய ஓர் பண்டைத் தமிழ் இலக்கியம் இந்த நூல்.

இலெமுரியாக் கண்டத்தின் பஃருளி ஆறு :-

ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!
வேந்தர்க்குக் கடனே!

பாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது.
ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆகும்.)

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

(வேந்தனின் முறையான ஆட்சியே மக்களைக் காப்பாற்றும். அதற்கேப்ப ஆட்சி புரிவதே ஆட்சியாளரின் கடமை என உணர்த்தும் பாடல் இது)

கற்கை நன்றே!

பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,

(ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாக இருந்தாலும் எவனொருவன் கலவி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றானோ உலகத்தாரால் மதிக்கப் படுவான் என்ற பொருளை உணர்த்தும் வரிகளாகும்)

நீரும் நிலனும் – வேளாண்மைப் பெருக்கமே மன்னர்க்கு வலுவும் புகழும்
பாடியவர்: குடபுலவியனார்]
பாடப்பட்டோன்:- பாண்டியன் நெடுஞ்செழியன்.

தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

(வேளாண்மையின் பெருக்கமும், விவசாயிகளின் காப்புமே ஒர் மன்னருக்கு வலிமையையும் புகழையும் தரத்தக்கன என 2500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திய பாடல் இது)

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு – 192)

எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் என் உறவினர்கள்,
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை!
சாதல் புதுமையில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை!
வாழ்வு துன்பமானது எனவெறுத்து ஒதுங்கியதுமில்ல!
பேராற்று நீர்வழிப் ஓடும் ஒரு தெப்பம் போல
இயற்கை வழி நடக்கும் உயிர் வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்!
ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோர் என வியந்து போற்றியதும் இல்லை
சிறியோர் என இகழ்ந்து தூற்றுவதுமில்லை!

மேற்கண்ட பாடலில் அமைந்த இந்தச் செய்தியை எமக்கு முன்னால் வாழ்ந்த பெரியவர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளதாகப் ஒருவன் பாடுவதெனில் தமிழின் அறிவுத் தொன்மை எத்தகையது என்பதை உணர முடிகிறது.

தமிழர்களின் விழுமிய நுண்ணறிவினையும், பரந்த உள்ளத்தையும், வீர வரலாற்றையும் உலகிற்கு எடுத்துக் காட்டும் ஓர் உன்னதமான நூல் புற நானூறு ஆகும்.

இந்தப் பதிவுடன் செவ்வியல் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய குறிப்பு முற்றுப் பெறுகிறது. இனி வரும் நாள்களில் மற்றொரு நூல்தொகுதியான பத்துப் பாட்டு குறித்துப் பேசுவோம்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
9-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)

துளி: 9
வாசிப்பு நேரம் : 6 நிமையங்கள் / 8-01-2022

அகநானூறு

அகநானூறு – எட்டுத் தொகை எனப்படும் சங்ககாலத் தொகுப்பில் உள்ள ஒரு அருமையான நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது.

இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, ‘நெடுந்தொகை’ என்பர். (நெடுமை+தொகை. நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு)

இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது இந்த இலக்கியம் மட்டுமே!

இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.

அகநானூற்றுப் புலவர்கள் சற்றொப்ப 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.

நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.

பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே “அகம்” எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும் கூறுகின்றன.

களிற்றியானைநிரை

1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.

மணிமிடை பவளம்

121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.

நித்திலக் கோவை

301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.

அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.

  1. 3, 5, 7, 9 …………399 எனவரும் பாடல்கள் பாலைத்திணை – 200
    (ஒற்றைப்படை எண்கள் அனைத்தும்)
  2. 8, 12, ………398 எனவரும் பாடல்கள் குறிஞ்சித்திணை- 80
    (பின்வருவன தவிர்த்த இரட்டைப்படை எண்கள் அனைத்தும்)
  3. 4, 14, 24……………..394 எனவரும் பாடல்கள் முல்லைத்திணை- 40
    (4 இல் முடிவன)
  4. 6, 16, 26, 36 …………….396 எனவரும் பாடல்கள் மருதத்திணை – 40
    (6 இல் முடிவன)
  5. 10, 20, 30, 40 …………..400 எனவரும் பாடல்கள் நெய்தல்திணை – 40
    (0 இல் முடிவன)


இதுவே அகநானூற்றில் காணப்படும் முறை வைப்பாகும். இச்சிறப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை.

இம் முறை வைப்பை, ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறுதலைக் குறிஞ்சிக் கூற்று
என்ற பழம்பாடல் குறிப்பிடும்.

நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க “குடவோலை முறை” பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழியாகவே நமக்குத் தெரிகிறது.

யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தி காணப்படுகிறது. முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி
(அகநானூறு, 149:9-11)

(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு) இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, உரிப்பொருள் போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளும் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன.

உள்ளுறைச் சிறப்பு

உள்ளுறையைப் பயன்படுத்திய அக நூல்களில் அகநானூறு நான்காவது இடத்தில் உள்ளது. மொத்தம் 51 பாடல்களில் உள்ளுறை அமைந்துள்ளது.
குறிஞ்சித் திணையில் 22 பாடல்களிலும் மருதத் திணையில் 14 பாடல்களிலும், நெய்தல் திணையில் 11 பாடல்களிலும், பாலைத் திணையில் 4 பாடல்களிலும் ஆக 51 பாடல்களில் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணைப் பாடல்களில் உள்ளுறை இடம்பெறவில்லை.

உரிப் பொருள் சிறப்பு

தொல்காப்பிய அகத்திணை இயலில் ஐந்து திணைகளின் உரிப்பொருளுக்குச் சான்று காட்டியுள்ள உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல்களை மட்டுமே காட்டி உள்ளது இந் நூலுக்குக் கிடைத்த சிறப்பு எனலாம்.
இந்நூலில் மிகுதியான அளவில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

116 பாடல்களில் ஏறத்தாழ 87 அரசர்கள் மற்றும் படைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒரே பாடலில் (44) ஒன்பது அரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவும் இந் நூலுக்குரிய சிறப்பு ஆகும்.̀

சில துளிகள் :

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!'' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே.. (அக-155)

அறம் செய்வதே வாழ்க்கை. அதில் கடைப்பட்ட நிலை கூடாது. வாழ்க்கைக்காகப் பிறர் வாசற்படிக்குச் செல்லக்கூடாது. செல்வம் இந்த இரண்டு நெறி நிலைகளையும் செய்யும் என்று என் கூந்தலை நீவிக்கொண்டே சொல்லியவர் பொருளீட்டச் சென்றுள்ளார். அணிகல ஒப்பனை பூண்டவளே! கேள்.

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல் …..

காதலும், குற்றம் காணா அறியாமையும் மென்மையும் ஒழுக்கமும் எலும்பையும் நெகிழ்க்கும் இன்சொல்லும், பிற பண்புகளும் தலைவியுடன் ஒன்று பட்டுள்ள நல்ல கொள்கையையுடையவராய் ஒன்றிணைந்து தழுவி இன்றைக்கு இவ்விடத்தில் இருக்க, நாளைப் பொழுது புதர்கள் வளர்ந்துள்ள இடத்திலுள்ள அசைகின்ற மூங்கிலின் மேல் வண்டு துளைத்த அகலமில்லாத சிறிய அழகிய துளை வழியே மேல்காற்று புகுந்து வருவதால் நீருக்காகச் செல்லுகின்ற பசுக் கூட்டத்தின் பின்னால் செல்லும் நீண்ட கோலையுடைய இடையர்கள் ஊதுகின்ற குழலின் இசையைப் போல இனிதாக வந்து இசைக்கும்

இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகுபெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி
திண் கால் உறியவன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறு மகள் உறைவு இன் ஊரே (274)

பெரிய வானம் முழுவதும் அதிரும்படி இடித்து முழங்கி, பாம்புகளை வருத்தி விழுகின்ற மழையாகிய மிகுந்த மழைத்துளிகளைப் பெய்து, மேகமானது கார்ப் பருவத்தைச் செய்த நள்ளிரவில் ஆடுகின்ற தலையினையுடைய செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாப்பாக இருக்க, தீக்கடையும் கோலால் கடைந்தெடுத்த சிறிய தீப்பொறியை விறகில் சேர்த்து வளர்த்து திண்ணிய கால்களையுடைய உறியையும், பானையினையும், தோல்படுக்கையினையும் உடையவனாய் நுண்ணிய பல மழைத் துளிகள் தனது ஒரு பக்கத்தை நனைக்க, தண்டினை ஒரு காலக ஊன்றி, ஒற்றைக் காலில் நிற்கும் இடையன் உதட்டை மடித்து விடும் சீழ்க்கை (விசில்) விரைந்து சென்று ஒலிக்க துள்ளி விளையாடும் குட்டியைக் கவர்ந்து செல்லப் பார்த்துக் கொண்டிருக்கும் குள்ள நரி அஞ்சி முட்களையுடைய சிறிய புதர்களின் விழுந்தடித்துக் கொண்டு போகும் குளிர்ச்சியான மணங்கமழும் முல்லைக் காட்டில் உள்ளது. நறுமணமுடைய மலரான முல்லையை அணிந்த கற்பொழுக்கம் உடைய மெல்லிய இயல்பினையும் இளமையும் உடைய எம் காதலியின் வாழ்வு.

இவ்வாறு எண்ணற்ற வாழ்வியல் அறத்தையும், நுண் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள ஒரு சிறந்த இலக்கியம் “அகநானூறு” ஆகும்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
8-1-2022

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)

துளி: 8
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 7-01-2022

கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலான கலித்தொகை சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்டவையாகும்.

இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம்.

முன்னைய நாளில் கலித்தொகையைப் பயிலாத ஒருவனை கற்றவரென எவரும் போற்ற மாட்டார். கலித் தொகையைப் படிக்காதவன் ஒரு சிறந்த பாவலனாக முடியாது என்றும் கருதினர். திருதக்கத்தேவர், கம்பன், சேக்கிழார், சிவஞான முனிவர் போன்ற பெரும்புலவர்கள் கலித்தொகைப் பயின்றவர்களாவர்.

எனவே தான் இந்நூல் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’, ‘கல்வி வலவர் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

கலித்தொகைப் பாடல்களில் கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35, குறிஞ்சிக்கலியில் 29, மருதக்கலியில் 35, முல்லைக்கலியில் 17, நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

கலித்தொகை நூலை முதன் முதலில் ஈழத்தைச் சார்ந்த தமிழறிஞர் சி.வை. தாமொதரம்பிள்ளை 1887 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக “நல்லந்துவனார் கலித்தொகை” என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். தமிழ் நூல்களைக் கண்டெடுத்துப் பதிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

அதன் பின்னர், பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும், வேறு நூல்களை ஆராய்ந்தும், உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பேராசரியராக விளங்கிய இ.வை. அனந்தராமரைய்யர் 1925இல் பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம்

கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர்- பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர்
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் – மருதன் இளநாகன்
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் – சோழன் நல்லுருத்திரன்
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர்- நல்லந்துவன் ஆகியப் புலவராவர்.

ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின்ன என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்கள் உள்ளன.

“‘பண்பு’ எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;”
எனக் கூறுகிறது.

பண்பு என்பது உலக நிலைமையறிந்து நடத்தலாகும். இவ்வாறு உலக நிலையறிந்து நாம் நடக்கும் போது மகிழ்ச்சியான வாழ்வு வாழமுடியும் என்பது இப்பாடலின் மூலம் வலியுறுத்தப்படுகின்றமை நோக்கத்தக்கது.
அன்பு

அன்பே வாழ்வின் ஆதாரமாகும். பொருளை விடவும் அன்பு சிறந்ததாகும். கலித்தொகையில் அன்பு நெறி பலவாறு எடுத்துக் காட்டப்படுகிறது.

“‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை” (-நெய்தற்கலி:16:9)

எனவரும் கலித்தொகைப் பாடலால், அன்பு என்பது தன் சுற்றத்தினரைக் கோபியாது இருத்தல்; எனப்படுகிறது. மேலும், தலைவன் மீது தலைவி கொண்ட அன்பினை எடுத்துக் கூறுவதன் மூலமாகவும் அன்புநெறி எடுத்துக்காட்டப்படுகிறது.

“அன்பு கொள மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறுகரால் ஆற்றும், ‘புறவு’ எனவும் உரைத்தனரே”,
(பாலைக்கலி:10:12-13)

எனவரும் பாடல்களின் மூலம் அன்பின் தன்மை வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்திலும் சமூகத்திலும் நாம் அன்புடன் வாழ வேண்டும், அப்போதே மனித வாழ்வு சிறப்புடையதாகும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

(கலி ,133) மேற்கண்ட பாடலை விரித்து விளக்க வேண்டியதில்லை.

தலைவியின் பெற்றோர்கள் தன் மகளுக்கு திருமணம் குறித்து ஆலோசிக்கின்றனர். தலைவியோ தன் காதலனைக் காண முடியாமையால் வருத்தம் ஒரு புறம், திருமண ஏற்பாடுகள் மறுபுறம் என துயரத்தில் உடல் மெலிந்து காணப் படுகிறாள். தன் தோழியை தூது அனுப்பி திருமண முயற்சியை மேற்கொள்ளுமாறு காதலனிடம் சொல்லி பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை தடுக்க முயற்சி செய்யுமாறு இடித்துரைக்க வேண்டுகிறாள். அவன் நான் ஆணையிடுவதாக எண்ணாதவாறு அன்பாகச் சொல் என்னும் பொருள் பட இளமைக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு பாடல்:.

………… கூறுக மற்று இனி
சொல் அறியாப் பேதை! மடவை! மர்று எல்லா!
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல்; அகலும் நீடின்று;
நினக்கு வருவதாகக் காண்பாய்; அனைத்து ஆகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு;
தருமணல் தாழப் பெய்து; இல்பூவல் ஊட்டி,
எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்
பெருமணல் எல்லாம் தனித்தே ஒழிய
வரிமணல் முந்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள், பிணர்ந்த
ஒருமணந்தான் அறியுமாயின்; எனைத்தும்
தெருமரல் கைவிட்டிருக்கோ? அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல் பன்றோ!

நட்பைப் பற்றிக் கூறுகையில்:-

“பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்”

கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் (பீடிலார்) என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.

கற்றறியா விலங்குகள் கூட காதல் வயப்பட்டு எவ்வாறு செயல்படுகின்றன என்பதை:

கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து
மெல்விரல் மந்தி குறை கூறும் செம்மற்றெ
தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லல் படுவான் மலை.

கல்வியறிவு இல்லாத ஆண் குரங்கு ஒன்று, கூட்டமாகக் கூடியிருக்கும் சுற்றத்தாரிடம் சென்று மெல்லிய விரல்களையுடைய மந்தியைப் பெண்கேட்டுத் தன் குறைகளைக் கூறும் தன்மையது, தான் காதலித்த மங்கையரின் அழகை நுகர்ந்து பின்னர் பிரியும் போது அவர் அழகிழந்து போனால் அவரினும் அதிகமாக வருந்தும் தலைவனுக்குரிய மலை.
( மலை கூட வருந்தும் எனக் கூறுகிறது)

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூழ் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை
என நாம்
தன்மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான்

சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண் யானை, தான் விரும்பும் பெண்யானைக் கொண்ட முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழைய வளைத்து முறிக்கும், தன்னைச் சேர்ந்தவரை ஒரு போதும் நீங்க மாட்டேன் என்று கூறுகிறவனின் மலை என்று நாம் அவன் மலையைப் பாட அதனை விரும்பிக் கேட்டருளி உடல் பூரித்த உவகையுடன் வந்து விட்டான் – என்ற பொருள் பட அமைந்த பாடல்.

கலித்தொகையில் வாழ்வுக்கு நலம் சேர்க்கும் வாழ்வியல் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. மிகச்சிறந்த நற்பண்புகளை பின்வரும் தலைமுறையினர் நன்முறையில் பின்பற்றும் வகையில் கலித்தொகை தொகுத்துரைத்திருக்கும் பாங்கு குறிப்பிடற்குரியது.

இந்நூலில் கூறப்படும், பண்புடமை, அன்பு, மனையறம், கற்புநெறி, ஈகை போன்ற வாழ்வியற் சிந்தனைகள் யாவும் மனித வாழ்வின் மேன்மைக்கு முகாமையானவையாகும். இத்தகு வாழ்வியல் தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்பதல்ல, இவை உலக மாந்தர் யாவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். எனவே கலித்தொகை காட்டும் வாழ்வியல் நெறிகளை நாம் கடைப்பிடித்து வாழும்போது நல்முறையில் வாழ்ந்து வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது திண்ணம்.

கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
7-1-2022

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives